தனிமையில் இருந்த கணவன், மனைவி… ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் : காத்திருந்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2025, 10:15 am
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 22-ம் தேதி, இருவரும் தனிமையில் இருந்தபோது, சிலர் ஜன்னல் வழியாக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்து, தங்கள் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் இடத்திற்கு ஒரு நபர் சென்று, தான் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகக் கூறி, புகார் வந்துள்ளதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் என்றும் கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றார்.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், அந்த நபர் தனது செல்போனில் உள்ள வீடியோவைக் காண்பித்து, “இதில் இருப்பவர் நீங்கள் தானே?” என கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், வீடியோ எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என வினவியபோது, அந்த நபர், “வீடியோவை யாரிடமும் பகிராமல் இருக்க, 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்” என மிரட்டியுள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த நகையைக் கேட்டபோது, அது கவரிங் எனத் தெரிவித்ததும், “நாளை 20,000 ரூபாய் பணம் கொண்டு வந்து, உங்கள் கணவருக்கு தெரியாமல் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவோம்” என மிரட்டியுள்ளார்.

இதனால் பதறிப்போன பெண், இந்த விவகாரத்தை தனது கணவரிடம் தெரிவித்து, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வைத்தியலிங்கத்தைச் சேர்ந்த கோகுல் சந்தோஷ் (21), முத்து பாண்டி (24), ஹரிஹரசுதன் (28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஹரிஹரசுதன் சித்த மருத்துவராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.
