போலீசாரால் எனக்கு நிம்மதி இல்லை : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியோடு வந்த மாவோயிஸ்ட் முழக்கம்!!

23 November 2020, 11:31 am
Maoist - Updatenews360
Quick Share

கோவை: போலீசார் பின் தொடர்ந்து, நிம்மதியைக் கெடுப்பதாக மாவோயிஸ்ட் வீரமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மனைவியுடன் வந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாவோயிஸ்ட் வீரமணி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் வீரமணி கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மனைவி கைருனிசா மற்றும் வழக்கறிஞர் உடன் வந்த வீரமணி திடீரென்று கோஷங்களை எழுப்பினார். போலீசார் நிம்மதியை கெடுத்து சுதந்திரமாக வாழ விடுவதில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறையிலிருந்து பிணையில் வந்தது முதல் தற்போது வரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள க்யூ பிரிவு அலுவலகத்தில் தினமும் இருமுறை கையெழுத்திட்டு வருகிறேன்.

இந்த சூழ்நிலையில், நான் குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளரிடம் என்னை வீட்டைவிட்டு காலி செய்யக்கூறி காவல்துறையினர் மிரட்டினர். மேலும், விசாரணை என்ற பெயரில் எங்கள் வீட்டில் அருகில் உள்ளவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

எந்த நேரமும் கண்காணிப்பு என்ற பெயரில் என்னை தொடர்வதும்,புகைப்படம் எடுப்பதும், என்னுடன் பேசுபவர்களை புகைப்படம் எடுப்பதும் என்ற வகையில் நிம்மதியை கெடுக்கின்றனர். என்னை தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் போல சித்தரிக்கின்றனர். இது உளவியல் ரீதியாக மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே எனது அடிப்படை உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாவோயிஸ்ட் வீரமணி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் வீரமணி அவரது மனைவி மற்றும் வழக்கறிஞருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மாவோயிஸ்ட் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0