அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? செய்தியாளர்களிடம் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
Author: Udayachandran RadhaKrishnan9 September 2025, 4:06 pm
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து கூறியதன் பேரில் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை திடீரென புறப்பட்டு டெல்லி சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதாகவும் அங்கு ராமரை தரிசிக்க இருப்பதாகவும் கூறி சென்றார்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை திரும்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற நிலையில் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்ததாகவும் அதன் பேரில் அங்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து இன்றைய அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை பரிமாறியதாகவும் குறிப்பிட்டார்.
எல்லோரும் ஒன்றிணை வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்துக்களை எடுத்துரைத்ததாகவும் அந்த கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் இருப்பவர்கள் அவரவர்க்கு ஏற்ப தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வரும் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற நேரத்தில் அங்கே ரயில்வே துறை அமைச்சர் வந்ததாகவும் அவரிடம் ஈரோட்டில் இருந்து சென்னை வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஏற்கனவே இரவு 10 மணிக்கு புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது முன்கூட்டியே புறப்படுவதால் அதிகாலை 3 மணிக்கு சென்னை செல்வதாகவும் அதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மாணவர்கள் செல்வது கடினமாக இருக்கிறது என்று குறிப்பிட்டதன் அடிப்படையில் உடனடியாக பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் மக்கள் பணி அனைத்தும் செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என்றும் கூறிச் சென்றார்.
