அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2025, 4:41 pm
தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அதன் பொருட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்திருந்த அஜித்குமார் தம்பி நவீன் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்புவனம் காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் தரப்படுவதாக கூறப்படுகிறது அதற்காக உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம்.
இதையும் படியுங்க: புகார் அளித்து 4 நாள் ஆச்சு.. அண்ணாமலைக்கு ஆதரவாக மீண்டும் ஆதரவாளர் ராஜினி கோரிக்கை!
தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி உள்ளது. ஆகையால் அருகில் உள்ள மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதுகுறித்து நான் வேண்டுகோள் வைத்துள்ளேன் ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அரசாங்க தரப்பில் இருந்து இல்லை. உயர் அதிகாரிகளின் அழுத்தமின்றி இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்காது ஆகையால் அவர்களையும் விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தமிழக அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா அமைந்துள்ள இடம், வளர்ச்சி அடையாத பகுதி. ஆகையால் இந்த ஒதுக்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. வீட்டுமனை என்பதை விட சித்திரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
தற்போது இந்த வழக்கில் உள்ள முக்கியமான சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது வரவேற்கத்தக்கது என்றார்.