பாஜக பிரமுகரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததே நான்தான்… சிக்கன் ரைஸ்காக வெளியான உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2025, 11:37 am
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் PPGD சங்கர். இவர் வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பிஜேபி கட்சியின் தமிழ் மாநில பட்டியலின பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஒரகடம் அருகே வாரணவாசி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த PPGD சங்கரை கொலை செய்த ஏ1 குற்றவாளி சாந்தகுமாரின் உறவினரான அகிலன் நேற்று இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார்.
அப்பொழுது சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.அங்கிருந்த மாஸ்டர் சிக்கன் ரைஸ் தீர்ந்து விட்டது என்று கூற ஏற்கனவே வேறொருவருக்கு சிக்கன் ரைஸ் போடப்பட்டு அதை சப்ளையர் அந்த குறிப்பிட்ட நபருக்கு கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த அகிலன் மிகவும் கோபமடைந்து அந்த குறிப்பிட நபரிடம் சென்று நான் யார் தெரியுமா பி பி ஜி டி சங்கரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தவன் நான்தான் என கூறி அந்த நபரை தாக்கியுள்ளார்.
அந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
