எனக்கு வாக்களிக்காத 2 பேர் வருந்துமளவுக்கு பணியாற்றுவேன் : மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 4:36 pm
Durai Vaiko Explains -Updatenews360
Quick Share

சென்னை : நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டனர் என துரை வைகோ தெரிவித்தார்.

மதிமுக தலைமை கழக செயலாளர் என்ற புதிய பதவியை வைகோவின் மகன் துரை வைகோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சிக்குள்ளே ரகசிய வாக்கெடுப்பு மூலம் எடுக்கப்பட்டது என வைகோ ஏற்கனவே விளக்கமளித்திருந்தார்.

ஆனால் துரை வைகோவுக்கு நேற்று இப்பதவியை கொடுத்தது முதல் இன்று வரை முக்கிய நிர்வாகிகள் மதிமுகவை விட்டு விலகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதிமுக தொண்டர்கள் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. அவர்கள் அழைத்ததால் வந்தேன்.

ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்காத 2 பேரும் தம்பிக்கு வாக்களிக்க வில்லையே என வருத்தப்படும் வகையில் செயல்படுவேன். மேடை ஏறி பிரச்சாரம் செய்வேன் என கனவிலும் நினைத்ததில்லை. மதிமுக என்ற கழக்கத்தின் எதிர்காலத்திற்காக இதைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் எழுந்திருக்கிறது.

அரசியல் என்பது நச்சு நிறைந்த வாழ்க்கை என்பதுதான் என்னுடைய கருத்து. தொண்டர்களின் உணர்வுப்பூர்வமான பற்றைக் கண்டு, இயக்கத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல் கட்சிக்கு வந்திருக்கிறேன்.

தலைவர் வைகோ போன்ற சொல்லாற்றல், செயலாற்றல் எனக்கு இல்லாவிட்டாலும், முடிந்தவரை நன்றாக பணியாற்றுவேன். ரகசிய வாக்கெடுப்பில் தலைவர் வைகோ உறுதியாக இருந்தார். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டனர்.

மலைபோன்ற சுமை என் மீது விழுந்துள்ளது. நம்மில் உள்ள வேறுபாடுகளை தவிர்த்து கட்சிக்காக பாடுபட வேண்டும். அரசியலுக்கு வருவேன், பரப்புரை செய்வேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என தெரிவித்தார்.

Views: - 249

0

0