திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து தலைதூக்கும் : கோவை பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேச்சு!!

23 January 2021, 10:23 am
Cbe CM Speech - Updatenews360
Quick Share

கோவை : திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகள் தலைதூக்கும் என்று பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பிரச்சார பயணமாக கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றதொகுதிகளிலும் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, இன்று காலை கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர் ராஜவீதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தேர்தல் வரும் சூழலில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பெண்களை அமரவைத்து குறைகளை கேட்பது போல திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். அதன்படியே கோவையிலும் ஒரு கிராம சபை கூட்டத்தை நடத்தினர். அங்கு பெண் ஒருவர் குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். அதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அந்த பெண் திமுக. வினரால் எப்படி எல்லாம் தாக்கப்பட்டார் என்ற செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதுதான் திமுக நடத்தும் கிராம சபை கூட்டம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது? ஒரு நன்மை கூட திமுக செய்யவில்லை. அதிமுக தலைவர்களை விமர்சிப்பதும், கவர்ச்சி வார்த்தைகளைப் பேசி மக்களை குழப்பவும் தான் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கான காரணம்.

இன்று காலையிலேயே கோவை குலுங்கும் அளவிற்கு கூட்டத்தை நாங்கள் பார்க்கிறோம். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று மக்களின் எண்ணி உள்ளனர் என்று நன்றாக புரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் முகத்தில் சிரிப்பு இருக்கிறது. இதுவே அடுத்து திமுக ஆட்சி அமைய அச்சாணி என்று கூறுகிறார். ஆனால் உங்களை எள்ளி நகையாடி சிரிக்கின்றனர் என்பதை உங்களால் உணர முடியவில்லை.

மக்கள் கேட்கும் கேள்விகளை ஏற்று அதற்கு பதில் கூறுவது தான் ஒரு தலைவனுக்கு அழகு. ஆனால் அந்த நாகரீகத்தை கூட ஸ்டாலினால் கடைபிடிக்க முடியவில்லை.

கோவை வளர்ந்து வரும் மாநகரம். இந்த 10 ஆண்டுகளில் கோவை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். திமுக.,வினர் குறைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் என்னென்ன செய்துள்ளோம் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறோம் என்று கூறி வாக்கு கேட்கிறோம்.

கோவையில் மேம்பாலங்கள், ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்திட்டம், புதிய மகளிர் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மேம்படுத்துதல் என பல திட்டங்களை செய்துள்ளோம்.

தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. இங்கு மதம் மற்றும் ஜாதி சண்டைகள் வரை விடமாட்டோம். இதனால் பல தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகிறார்கள். திமுக ஆட்சி போல் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லை. வியாபாரிகள் தொழிலதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்கின்றனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கொலை கொள்ளை அதிகரித்து மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.

சமீபத்தில் திமுக தலைவர் ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்தார். அதில் திருநெல்வேலி தென்காசி சாலை அமைப்பதில் ரூ.450 கோடி ஊழல் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சாலை அமைக்க டெண்டர்விடவும் இல்லை, நிதி ஒதுக்கவும் இல்லை இப்படிப்பட்ட பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார் திமுக தலைவர்.

அதிமுக அரசுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. யாரோ எழுதிக்கொடுப்பதை வைத்து பேசிவருகிறார் ஸ்டாலின். துண்டு சீட்டு இல்லாமல் நாங்கள் பேசத்தயார். குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்.

கொரோனா காலத்தில் எட்டு மாதங்கள் விலை இல்லாமல் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை ஆகிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கினோம். ஆனால் திமுக ஒரு மாதமாவது விலையில்லா பொருட்களை வழங்கி உள்ளதா. பொங்கள் கொண்டாட மக்களுக்கு 2500 ரூபாய் பணம் வழங்கினோம். அதை பொறுக்க முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் துணையுடன் நீதிமன்றத்தை நாடி தடையானை வாங்கச் சென்றார்.இந்த நல்லாட்சி தொடர மீண்டும் மக்கள் அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Views: - 7

0

0