ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக நடப்பேன்… பிரபல கிரிக்கெட் வீரர் சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan12 September 2025, 6:53 pm
சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். பல சாதனைகளையும் முறியடித்துள்ள அவர், இன்னும் ஆஸ்திரேலியாவில் சதமடிக்காதது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரூட், 9 அரைசதங்களை பதிவு செய்திருந்தாலும், சதம் ஒன்றையும் அடிக்க முடியவில்லை. அவரின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.
இந்த நிலையில், வரவிருக்கும் ஆஷஸ் தொடரை முன்னிட்டு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன், “இந்த முறை ஜோ ரூட் சதமடிப்பார். அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன்” என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜோ ரூட், 39 சதங்கள், 66 அரைசதங்கள் அடித்து மொத்தம் 13,543 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி, பந்துவீச்சிலும் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
