ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்..! ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!
26 January 2021, 1:08 pmஐ.ஐ.டி மெட்ராஸின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழு (சி.சி.ஏ.எஸ்.எச்) சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ குமார் பி.எச்.டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில், அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், திருமண வாழ்க்கையில் சிக்கலை எதிர்கொண்டபோதும், 2015’ஆம் ஆண்டில் பி.எச்.டி. படிப்பிற்கு பதிவு செய்ததாகவும், மே 2017 முதல் மாதவ குமாரின் கீழ் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாதவ குமார் ஆரம்பத்தில் மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் கடினமாக உழைக்க ஊக்குவித்தார் என்றும் மாணவி கூறியுள்ளார்.
“எனினும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவரது தன்மை மாறியது. குடும்ப நீதிமன்றத்தில் எனது விவாகரத்து நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். பல முறை, என்னை மறுமணம் செய்து கொள்ளச் சொன்னார். நான் அவரை ஆராய்ச்சி விஷயங்களுக்காக பார்க்கச் சென்ற போதெல்லாம், அவர் எனது தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே விவாதிப்பார்.
ஏப்ரல் 2, 2020 அன்று அவர் ஆய்வறிக்கை எழுதுதல் மற்றும் திருத்தம் செய்வதற்காக தனது வீட்டிற்கு என்னை அழைத்தபோது, அவரது சமையலறையில் வந்து அவருக்காக சமைக்க விருப்பம் தெரிவித்தபோது அவரது நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தன. தொலைபேசி உரையாடலின் போது, நான் என்ன சொல்வது என்று தெரியாமல் சங்கடத்துடனும் பயத்துடனும் இருந்தேன்.
இது எல்லாம் என் பெற்றோருக்கு முன்னால் நடந்தது. என் அப்பா, அம்மா இருவருக்கும் இந்த சம்பவங்கள் தெரியும். அவர் எனக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினார். நான் அவரது வீட்டிற்கு வரும்போது அவர் எனக்கு பயிற்சி தருவார் என்று சொன்னார். நான் பயிற்சியின் விவரங்கள் குறித்து கேட்டபோது, அவர் அதை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை என்றும் அதை எனக்கு நேரில் விளக்குவதாகவும் என்னிடம் கூறினார்.” என்று மாணவி தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேராசிரியர் ஹேமா மூர்த்தி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, இந்த புகார் குறித்து முறையாக விசாரித்து தனது பரிந்துரையை ஐஐடி நிர்வாகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
ஆதாரங்களை ஆராய்ந்து, இரு தரப்பினரின் அறிக்கைகளையும் பதிவுசெய்த பின்னர், குழு சமர்ப்பித்த அறிக்கையில், “மாதவ குமார் பிஎச்.டி வழிகாட்டியாக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் இது புகார் அளித்தவரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஒரு தற்காலிக உறவுக்காக மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளது.
குற்றம் உறுதி செய்யப்பட்டதால், மாதவ குமாரை போஷ் எனப்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பயிற்சிக்கு உட்படுத்த ஐ.ஐ.டி மெட்ராஸை குழு பரிந்துரைத்தது. மேலும் அவரை உதவி பேராசிரியராக பதவியிறக்கம் செய்வதோடு, ஆண் பி.எச்.டி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளும், பெண் பிஎச்.டி மாணவர்களுக்கு 5 ஆண்டுகளும் வழிகாட்டியாக செயல்பட தடை விதிக்க ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
மாணவி அளித்த ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைகளில் இருந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, “ஊரடங்கின்போது கூகுள் மீட் உள்ளிட்ட இணைய வாயிலாக சந்திப்பை நடத்திக்கொள்ளும் சூழ்நிலையில், ஆய்வறிக்கை திருத்தம் செய்வதற்காக தனது வீட்டிற்கு வரும்படி மாணவியிடம் மாதவ குமார் வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அவருக்காக சமைக்கும்படி மாணவியிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மாதவ குமாரின் எந்த முயற்சிகளுக்கும் ஆராய்ச்சி மாணவி மசியாததால், மாணவியின் நடத்தை குறித்து அவதூறு பரப்ப முயற்சித்துள்ளார். இத்தகைய செயல்கள் பாலின சமத்துவம் உறுதி செய்யப்பட்ட நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதே போல் தொடர்ந்து நடந்தால் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என குழு கருதுகிறது” என ஐந்து பேர் கொண்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியால் முறையாக புகார் அளிக்கப்பட பின், ஆகஸ்ட் 21, 2020 மற்றும் செப்டம்பர் 8, 2020 ஆகிய தேதிகளில் குழு இரண்டு சந்திப்புகளை நடத்தியதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி அக்டோபர் 15’ஆம் தேதி குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
எனினும் ஐஐடி மெட்ராஸின் நம்பகமான வட்டாரங்கள், சி.சி.ஏ.எஸ் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனரின் பரிந்துரைகளை எதிர்த்து மாதவ குமார் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த விஷயம் தற்போது நீதிமன்ற நடவடிக்கையால் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தன.
0
0