பிளிச்சிங் பவுடர் எனும் ஆபத்து: சர்க்கரை என நினைத்து சாப்பிட்ட குழந்தை எலும்பும் தோலுமாக மாறிய பரிதாபம்..!!

10 July 2021, 3:49 pm
Quick Share

தென்காசி: செங்கோட்டை அருகே பிளிச்சீங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்ட குழந்தை எலும்பும் தோலுமாக பரிதாபமாக மாறியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு குடிநீர் தொட்டி கீழ்புறம் பகுதியில் வசித்து வருபவர் சீதாராஜ். இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களின் 2வது மகள் இசக்கியம்மாள்.

5 வயதான இசக்கியம்மாள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது அந்த வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து இசக்கியம்மாள் வலியால் துடித்ததை பார்த்த அந்த வீட்டுக்காரர் இதுபற்றி அவருடைய தந்தைக்கு சீதாராஜுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, இசக்கியம்மாள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் பிளீச்சிங் பவுடரை சாப்பிடுவதற்கு முன் அழகாக இருந்த இசக்கியம்மாள் தற்போது உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சி அளிக்கிறார்.

மேலும், இசக்கியம்மாள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். திரவ உணவு மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது கொரோனா காரணமாக போதிய வருமானமின்றி குழந்தையை சரிவர கவனிக்க முடியாமல் சீதாராஜ் பரிதவித்து வருகிறார்.

இந்த தகவல் அறிந்த செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் இசக்கியம்மாளின் நிலையை கருத்தில் கொண்டு சிறுமியை மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 183

1

0