கொரோனா நோயாளிகளுக்கும், இதர நோயாளிகளுக்கும் ஒரே ஆம்புலன்சா..? கோவையில் தொற்று அதிகரிக்கும் அபாயம்..!

Author: Aarthi Sivakumar
26 June 2021, 4:55 pm
Quick Share

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதை காரணம் காட்டி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆம்புலன்சை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவது ஆபத்தானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது.அப்போது நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது.இதில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இதர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரே ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி ஆம்புலன்ஸ் ஒதுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு என பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கியது. இந்த சேவையில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

கோவையில் பிரத்தியேக 108 ஆம்புலன்ஸ் :-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 60 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்-2, இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்-4, பொது நோயாளிகளுக்கு-29 ஆம்புலன்ஸ் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 25 பிரத்தியேக ஆம்புலன்ஸ்கள் இயங்கி வந்தன.தொற்றின் வீரிய காலத்தில் இந்த சேவை கோவை மாவட்ட மக்களுக்கு மிகவும் அவசியமானதாக இருந்து வருகிறது. தற்போது கோவையில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும் முழுமையான தாக்கம் குறையவில்லை.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அனைத்து நோயாளிகளையும் அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் ஏற்றலாம் என குறுந்தகவல் வாயிலாக அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த குறுந்தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :-

அனைவருக்கும் வணக்கம் அனைத்து வாகனமும் தத்தம் அருகாமையில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கொடுக்கப்படும் “covid or non covid” கேஸ்களை தவறாமல் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தூய்மை சுத்திகரிப்பு செய்வது மிக மிக அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இதர நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரே ஆம்புலன்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது :-

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆம்புலன்சை மற்ற எந்த நோயாளிகளுக்கும் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.இது தொற்றை அதிகரிக்கும்.தொற்று குறைந்து விட்டது என நினைத்து ஆம்புலன்சை பொதுவாக்க கூடாது.

அதேபோல தற்போதெல்லாம் யாருக்கு தொற்று இருக்கிறது என்று தெரியாது. ஆகவே ஒவ்வொரு நோயாளியையும் மருத்துவமனையில் இருந்து இறக்கிவிட்டு கண்டிப்பாக ஆம்புலன்சை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த முறைகள் கையாளாவிட்டால் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதர நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Views: - 249

0

0