இந்திய அணி த்ரில் வெற்றி… இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை.. சிலிரிக்க வைத்த சிராஜ்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 4:41 pm
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று கடைசி நாளில், இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்ததால், ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது.
முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரில் முகமது சிராஜ் வீச, ஸ்மித் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரில் 4 ரன்கள் கொடுக்கப்பட்டன. சிராஜின் இரண்டாவது ஓவரில் ஓவர்ட்டன் வீழ்ந்தார்.
இதனால் இங்கிலாந்து 354 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், அட்கின்சனுடன் ஜோஷ் டாங்க் ஜோடி சேர்ந்தார்.81ஆவது ஓவரில் டாங்க் எல்பிடபிள்யூ ஆனார், ஆனால் இங்கிலாந்து அணி ரிவ்யூ கேட்டது. ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தாக்கவில்லை என்பது தெரியவந்ததால் டாங்க் தப்பினார்.
இந்த விக்கெட் இந்தியாவுக்கு வெற்றியை உறுதி செய்திருக்கும், ஏனெனில் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயத்தால் ஆடுவது சந்தேகமாக இருந்தது. இருப்பினும், அட்கின்சன்-டாங்க் ஜோடி சிறப்பாக விளையாடியது.
சிராஜ் அபாரமாக பந்து வீச, 80 ஓவர்கள் முடிந்த பின்னரும் இந்தியா புதிய பந்து எடுக்காமல் பழைய பந்தை பயன்படுத்தியது. சிராஜின் பந்துகள் சிறப்பாக ஸ்விங் ஆனது.
82ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்துக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 83ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச, கடைசி பந்தில் டாங்க் க்ளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து, 17 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
தோள்பட்டை காயத்துடன் கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார்.84ஆவது ஓவரை சிராஜ் வீச, இரண்டாவது பந்தில் அட்கின்சன் சிக்ஸர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், கடைசி பந்து பேட்டில் படவில்லை என்றாலும், பை (Bye) மூலம் ஒரு ரன் எடுக்கப்பட்டது.
ஜுரெல் ரன்-அவுட் செய்ய தவறினார். இதனால் 10 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீச, அட்கின்சன் 2 ரன்கள் எடுத்தார். ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார்.
இதனால் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என சமன் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இந்த விறுவிறுப்பான வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
