‘தந்தை இறந்தபோதிலும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமை தாங்கிய பெண் ஆய்வாளர்’ – நெகிழ்ச்சி சம்பவம்..!

15 August 2020, 11:54 am
Quick Share

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கோடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்த ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மகேஸ்வரியின் தந்தை நேற்று உடல்நல குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

இருப்பினும் அணி வகுப்பை ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் தந்தையின் இறப்புக்கு போகாமல் அணிவகுப்பை சிறப்புடன் முன்னெடுத்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் உள்ளிடோருக்கு மகேஸ்வரியின் தந்தை இறந்த தகவல் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, மகேஸ்வரிக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறி சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு அனுப்பி வைத்தனர்.