திருமணம் ஆகாத இளைஞர்களிடம் நூதன முறையில் மோசடி : பெண் இருப்பதாக கூறி நகை, பணம் அபேஸ்!!

3 July 2021, 11:47 am
Tirupur Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : திருமணத்துக்கு பெண் இருப்பதாகக் கூறி கேரள இளைஞர்களிடம் நூதன முறையில் நகை மற்றும் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 32). திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தார். கேரள மாநில பத்திரிகையில், மணப்பெண் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் விளம்பரம் செய்து இருந்தார்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து, ராமகிருஷ்ணனை ஒருவர் தொடர்பு கொண்டு, மணப்பெண் இருப்பதாக அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதை நம்பி ராமகிருஷ்ணன், கடந்த ஏப். 1-ம் தேதி, தனது நண்பர் பிரவீன் என்பவரை அழைத்துக்கொண்டு காரில் பல்லடம் வந்துள்ளார்.

அப்போது அலைபேசியில் தொடர்புகொண்ட நபர், இருவரையும் அழைத்து சென்று ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு, பெண்ணை அழைத்து வருவதாக சென்றனர். சற்று நேரத்தில், எட்டு பேர் கொண்ட கும்பல், இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கட்டி போட்டனர்.

கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை, ஏ.டி.எம்., மில் இருந்த ரூ. 40 ஆயிரத்தையும், பறித்து கொண்டு திருப்பி அனுப்பினர். இதையடுத்து, ஆலத்துார் காவல்துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கேரள தனிப்படை காவல்துறையினர், பாலக்காடு கஞ்சிக்கோட்டை சேர்ந்த விமல் (வயது 43), திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 40), சிவா( வயது 39), விக்னேஷ் (வயது 23) மற்றும் மணிகண்டன் (வயது 25) ஆகிய ஐந்து பேரை கைது செய்து பாலக்காடு சிறையில் அடைத்தனர்.

Views: - 335

0

0