இன்ஸ்டாகிராமில் மூழ்கியதால் தந்தை கண்டிப்பு… 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி தோழியுடன் மாயம்!

Author: Babu Lakshmanan
22 April 2022, 10:49 am

கோவை: பொழுது போக்கிற்காக இன்ஸ்டாகிராமில் மூழ்கிய சிறுமியை அவரது தந்தை கண்டித்ததால் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி தோழியுடன் மாயமாகியுள்ளார்.

ஊரடங்கு காலகட்டத்தில் சிறார்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு மடிக்கணினி, கணினி பயன்பாட்டை கடந்து பெரும்பாலும் செல்போன்களே பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பு நேரத்தைக் கடந்து பெரும்பாலான மாணவ, மாணவியர் சமூக வலைதள பக்கங்களையும், பொழுதுபோக்கு இணைய முகவரியையும் நாடினர். வீட்டிலேயே அடைபட்ட சிறார்களை பொழுது போக்கு சமூக வலைத்தளங்கள் ஆட்கொண்டுவிட்டன.

அவ்வாறு சமூக வலைத்தளங்களில் மூழ்கிய கோவை சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள் இல்லாத இந்த காலகட்டத்திலும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். 8ம் வகுப்பு படிக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கினார்.

அதிக நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட்ட நிலையில், அவரின் தந்தை கண்டித்திருக்கின்றார். படிப்பதற்கு நோட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமை பயன்படுத்தக்கூடாது என்று கூறிய சிறுமியின் தந்தை, செல்போனை பறித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் செயலிகளை அழித்துள்ளார்.

தந்தையின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி, தனது வகுப்பு தோழியுடன் மாயமாகியுள்ளார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் இரண்டு சிறுமிகளும் சென்னைக்கு ரயில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்னை சென்ரல் இரயில் நிலையத்தின் உதவியை நாடியிருக்கின்றனர். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கிய நிலையில் பிடிபட்டிருக்கின்றனர்.

பின்னர், குழந்தைகள் நல அமைப்பினரிடம் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை கோவைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!