கஞ்சா வழக்கை வைத்து மிரட்டி லஞ்சம் : பெண் உட்பட இரு காவல் ஆய்வாளர்கள் அதிரடி கைது!!

1 January 2021, 8:41 pm
Cbe CID- Updatenews360
Quick Share

கோவை : முன்னாள் கஞ்சா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். முன்னாள் கஞ்சா வியாபாரியான இவர், சமீபகாலமாக மனம் திருந்தி கஞ்சா விற்பனை தொழிலை விட்டுவிட்டு கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகுமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கூறி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி அழைத்து வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் விஜயகுமாரை அழைத்து வந்த போலீசார்,15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக வழக்கு போட்டு விடுவதாக கூறி மிரட்டியதாகவும், சாதாரண வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை புரட்ட தனது தாலியை விற்க மகேஸ்வரி முயன்றுள்ளார். அப்போது உறவினர்களின் யோசனையின் அடிப்படையில் மகேஸ்வரி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில் விஜயகுமார் மீது சாதாரண கஞ்சா வழக்கு பதிவு செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்துக் கொண்டு நீதிமன்ற வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி பணத்தை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி மற்றும் தலைமை காவலர் ராமசாமி ஆகியோரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இன்று காலை இருவரையும் லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி தோத்திரமேரி இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி தோத்திரமேரி உத்திரவிட்டார். இதனையடுத்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி கோவை பெண்கள் சிறையிலும், தலைமை காவலர் ராமசாமி பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Views: - 44

0

0