வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா? இத பண்ணுங்க : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 1:18 pm
Voter List - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்து 84 ஆயிரத்து 565 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று சப்- கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 15,19,419 பெண் வாக்காளர்கள்15,64,628 மூன்றாம் பாலினத்தவர்கள் 518 என மொத்தம் 30,84,565 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக 8798 ஆண், 9116 பெண், மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 15476 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பார்வையிடலாம். இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் இந்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

இந்த மாதம் 13, 14, 27 மற்றும் 28-ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பதிவு நீக்கம் செய்ய படிவம் 7, ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8ஏ படிவம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம்.

Views: - 483

0

0