ஈஷா தியானலிங்கம் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா கொண்டாட்டம்! பல்வேறு மதங்களின் மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 11:35 am

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) பெரு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்களும் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவிலும் அர்ப்பணிக்கப்பட்டன.

தியானம் என்றால் என்னவென்றே அறியாத மக்களும் தியானத் தன்மையை உணர வழிவகுக்கும் வகையில், யோகா அறிவியலின் படி 7 சக்கரங்களும் சக்தியூட்டப்பட்ட லிங்க வடிவமே தியானலிங்கம். சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியானம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அந்த வாய்ப்பை வழங்க தியானலிங்க வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தில், உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைப்பெறுகிறது.

இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் இன்று காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் “ஆம் நமசிவாய” மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடகம்’ எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

பின்னர் மயிலை சத்குரு நாதன் அவர்களால் தேவாரமும், ‘செரா மே’ என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் புத்த மந்திர உச்சாடனமும் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கோவையை சேர்ந்த FSPM சிஸ்டர்ஸ் கிறுஸ்தவ பாடல்களையும், சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ர-சமக வேத கோஷத்தையும் அர்ப்பணித்தனர்.

மேலும் வெறும் இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனை நிகழ்வும், அதனை தொடர்ந்து குருத்வாரா சிங் சபா அவர்களின் குருபானி, சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் மந்திர உச்சாடனங்கள் நடைப்பெற்றன. பின்னர் சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமிய பாடல்களை அர்ப்பணித்தனர்.

அதற்கடுத்து, ஆசிரமவாசிகள் சூஃபி பாடல்களையும், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா பாடல்களையும் இசை அர்ப்பணிப்புகளாக வழங்கினர். பிறகு தீக்‌ஷை நிகழ்ச்சியும் இறுதியாக ‘குண்டேச்சா சகோதரர்களின்’ இசை நிகழ்ச்சியுடன் இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவுப்பெற்றன.

ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!