பெரும்பாலான சாமியார்கள் தேடப்படும் குற்றவாளிகள் தான்… இந்தப் பருப்பு இங்கு வேகாது… இது திராவிட மாடல் ஆட்சி ; கீ.வீரமணி..!!

Author: Babu Lakshmanan
7 October 2022, 10:02 am

திருச்சி ; இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட குற்றவாளிகளாக, தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டு வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :- முன் இருந்த காலத்தை விட தற்போது பெரியார் அதிகம் தேவைப்படுகிறது. மதவாதம், ஜாதிவாதம் தலை தூக்கி ஆடுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேத பாட சாலையில் படித்தவர்கள் பத்தாவது, 12வது படித்ததற்கு சமம் என பா.ஜ.க அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என கூறி இருக்கிறார்கள். இது பிற்போக்குத்தனமான கண்டிக்கத்தக்க நடவடிக்கை.

கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதில் குற்றம் குறைகளை கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து இந்த அரசை காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின், குறிப்பாக தி.க வின் கடமையாக உள்ளது.

குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால், சிதம்பர தீட்சிதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட குற்றவாளிகளாக, தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள். ராஜ ராஜன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியான கருத்து. அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது.

வேதங்களில் கூட இந்து என்கிற வார்த்தை கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என நீதிமன்ற தீர்ப்புகளே உள்ளது.

தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது இந்திய மக்களுக்கே தெரியும், அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அந்த ஆணையங்கள் பல் இல்லாத ஆணையங்களாகவே உள்ளன, என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!