சங்கராபுரம் பட்டாசு கடை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு… தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Author: Babu Lakshmanan27 October 2021, 12:50 pm
சென்னை : கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவர் பட்டாசு கடை போட்டிருந்தார். அந்த கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. பட்டாசு கடைக்கு அருகில் இருந்த பேக்கரிக்கு தீ பரவியதை அடுத்து அங்கிருந்த சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்ததது.
சுமார் நூறு மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியபட்ட சிலிண்டருடன் பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. பட்டாசு கடையில் ஏற்பட்ட இந்த பயங்கரமான தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பொதுமக்கள் உயிரிழந்திருப்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0