ரியல் எஸ்டேட் அதிபரை சொத்துக்காக கொலை செய்த மகன்! காஞ்சிபுரத்தில் பயங்கரம்!!

6 September 2020, 1:25 pm
Kacnhi Murder - Updatenews360-Recovered
Quick Share

காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரான தந்தையை பெற்ற மகனே கூலிப்படை உதவியோடு கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). ரியல் எஸ்டேட் அதிபரான ஜெயராமன் பெரிய பெரிய நிறுவனங்களிலிருந்து ஸ்கிராப் எனப்படும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பத்மாவதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதேபோல் இரண்டாம் மனைவியான கோவிந்தமாளுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். விவேக் (வயது 27) என்கிற மூத்த மகன் திருமணமாகி தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார்.

விக்னேஷ் (வயது 25) என்கிற இளைய மகன் வல்லம் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஜெயராமனின் இரண்டு மனைவிகளும் சுமார் கால் கிலோ மீட்டர் இடைவெளி தூரத்தில் தனித்தனியாக வசித்து வருகின்றார்கள்.

ஜெயராமன் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஸ்கிராப், ரியல் எஸ்டேட், கனரக வாகனங்கள் நிறுத்தும் முனையம் என பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார்.

இதன் மூலம் சம்பாதிக்கபடும் அனைத்து பணத்தையும் சொத்துக்களையும் பத்மாவதியின் பிள்ளைகளுக்கு மட்டுமே ஜெயராமன் செலவிட்டு வந்துள்ளார். இதனால் கோவிந்தம்மாளின் இளைய மகன் விக்னேஷ் மட்டும் தந்தை ஜெயராமன் இடம் அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்பது வழக்கம்.
சம்பவம் நடந்த அன்று எழுச்சூர் ஏரிக்கரை அருகே வந்த தந்தை ஜெயராமனை மடக்கி பணம் கேட்டுள்ளார்.

ஜெயராமன் பணம் கொடுக்க மறுக்கவே எங்களுக்கு உண்டான சொத்துகளைப் பங்கிட்டுக் கொடுங்கள் என மீண்டும் விக்னேஷ் வற்புறுத்தினார். ஜெயராமன் அதற்கும் செவிசாய்க்காத காரணத்தினால் தந்தையை தகாத வார்த்தைகளால் விக்னேஷ் பேசியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜெயராமன், நான் எத்தனை மனைவிகளை வேண்டுமென்றாலும் கட்டிக் கொள்வேன், வப்பாட்டிகளாகவும் வைத்துக்கொள்வேன் ஆனால் உனக்கு பணம் தர மாட்டேன் என அழுத்தமாக கூறியதால் ஆவேசமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த வயர் ஒன்றை எடுத்து நண்பர்களின் துணையுடன் தந்தை ஜெயராமனின் கயிற்றில் சுற்றி இறுக்கியுள்ளனர்.

இதில் மூச்சு திணறி ஜெயராமன் கீழே விழுந்தார். தந்தை சுயநினைவின்றி உடலில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக மனைவி பத்மாவதிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உறவினர்கள் விரைந்து வந்தனர். பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஜெயராமனை மீட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெயராமன் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஜெயராமனின் உடலில் காயம் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்க முடிவு எடுத்தனர்.

அதைக் கண்ட விக்னேஷ் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதை தடுத்து உறவினர்களிடம் ரகளை செய்து உடலை அடக்கம் செய்வதற்கான சடங்கு உள்ளிடுட ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். விக்னேஷின் நடவடிக்கைகளில் சந்தேகமுற்ற உறவினர்களும் பொதுமக்களும் சுங்குவார்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சுங்குவார்சத்திரம் போலீசார் விக்னேஷ் இடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

காவல் ஆய்வாளர் மணிமாறனின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய விக்னேஷ் 6 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து தந்தை ஜெயராமனை பணத்திற்காகவும் சொத்துக்காகவும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி அருகே சொத்துக்காக பெற்ற தாயையே மகன் கத்தியால் குத்திய கொடூர செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சொத்துக்காக தந்தையையே மகன் கொன்ற செய்தி பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே மிகுந்த அச்சத்தை அளித்துள்ளது.

Views: - 0

0

0