பெண் டாக்டர் வீட்டில் கொள்ளைபோன 90 சவரன் நகை மீட்பு : தனிப்படை போலீசார் சாமர்த்தியத்தால் திருடன் கைது..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 12:46 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 90 சவரன் நகையை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லூத்ரன் தெருவை சேர்ந்தவர் அமலகுமார். இவருடைய மனைவிடாக்டர் ஜலஜா தேவகுமாரி (59). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

கணவரும், மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதை-யடுத்து ஜலஜா தேவகுமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஜலஜா தேவகுமாரி நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ஜலஜா தேவகுமாரி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 90 பவுன் நகை மற்றும் ரூ.1.26 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அப்போது வீட்டில் இரண்டு கைரேகைகள் சிக்கியது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஜோய் (52) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சுமார் 85 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட ஜோய் பிரபல கொள்ளையன் ஆவான். இவர் மீது ஏற்கனவே திருவனந்தபுரத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவன் ஏற்கனவே நாகர்கோவிலுக்கு வந்து சென்ற போது ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுள்ளான். அப்போதுதான் டாக்டர் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட ஜோயிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

Views: - 898

0

0