அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்… 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு குமரி கிழக்கு பகுதியில் மீன்பிடிக்கத் தடை..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 7:37 pm
Fisherman Strike -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி கிழக்கு மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜுன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் / வழிவலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன்படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகு அல்லது தூண்டில் / வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இத்தடையை மீறி மீன்பிடித் தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்பட்டு மானிய டீசலும் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கலாகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 955

0

0