கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி மறுப்பு!!

Author: Babu Lakshmanan
19 April 2022, 7:55 pm
Quick Share

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடல்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம்போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இநிலையில் பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது.

இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்களை நனைக்க அச்சப்பட்டனர். இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுற்றுலா போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்க தடை விதித்தனர்.

ஏற்கனவே கடலில் ஆனந்தகுளியல் போட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினார். இதேபோல கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜாக்கமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

Views: - 748

0

0