10 மாதமாக ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பு.. CM தனிப்பிரிவுக்கு மனு அளித்தவரை வெளியே தள்ளி கதவை அடைத்து அராஜகம்.. வாசலிலேயே பெண் தர்ணா…!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 11:09 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 10 மாதங்களாக கைத்தறி நெசவாளர் சங்கம் ஊதியம் வழங்காதது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பிய ஊழியரை வெளியேற்றி சங்க அலுவலகத்தை மேலாளர் பூட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முதலார் பகுதியில் முதலார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முதல்நிலை எழுத்தாளராக வசந்தா என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கு கடந்த 10 மாதங்களாக கூட்டுறவு துறை சார்பில் ஊதியம் வழங்காமல் இருந்துள்ளது. சொந்தமாக வீடுகூட இல்லாத வசந்தாவின் கணவர் புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ள நிலையில், மருத்துவ செலவிற்காக தனது பிஎப் பணத்தின் ஒரு பகுதியை கேட்டு கைத்தறி மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து சங்கத்தின் பெயரில் அந்த பணத்தை மாவட்ட கூட்டுறவுத்துறை அனுப்பியுள்ளது. இதனால் தனக்கு எந்த பயனும் இல்லை எனகூறி மீண்டும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார் வசந்தா. ஆனால் கூட்டுறவுதுறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது குறித்து முதல்வர் தனி பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அலுவலகம் வந்த எழுத்தர் வசந்தாவை அலுவலக மேலாளர் கிரிஜகுமார் வெளியேற்றி சங்க அலுவலக கதவையும் பூட்டி சென்றுள்ளார். இதனையடுத்து, சங்க அலுவலக வாயிலில் அமர்ந்து வசந்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தப்பபதாகவும், தனது கணவரின் மருத்துவ செலவிற்கு பணமில்லாததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தனது பிஎப் பணத்தையும், ஊதியத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 704

0

0