அரசுக்கு சொந்தமான நூற்பாலை மூடல்! ஒரே நேரத்தில 15 பேர் கொரோனாவால் பாதிப்பு.!!

10 August 2020, 3:42 pm
Kanyakumari Mill - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் 15 தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் பணக்குடி உட்பட பகுதிகளை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கூட்டுறவு நூற்பாலை நிர்வாகத்தை சேர்ந்த நிர்வாகி உட்பட அதிகாரிகள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் கூட்டுறவு நூற்பாலையில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. ஆனால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என எந்த விதமான கொரோனா பரிசோதனையும் சுகாதாரதுறையினரால் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சுகாதார துறையினரால் எடுத்து செல்லப்பட்டது. இதில் முதற்கட்டமாக வந்த கொரோனா பரிசோதனை முடிவில் ஒரே நேரத்தில் பத்து ஆண் தொழிலாளர்கள் ஐந்து பெண் தொழிலாளர்கள் என 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஏராளமான தொழிலாளர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிய வேண்டியது உள்ளதால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று மிக பெரிய அளவில் பரவு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒரே நேரத்தில் 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் கொரோனா பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கூட்டுறவு நூற்பாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

Views: - 11

0

0