ரயில் விபத்தால் ரத்து செய்யப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா.. மாற்றுத் தேதியை அறிவித்தது திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 6:43 pm
Karunanidhi - Updatenews360
Quick Share

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவின், பாலசோர் அருகே விபத்தில் சிக்கி 275 பேர் பலியானர்கள்.

கடந்த 2 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் நேற்று ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டிருந்தது.

ஆனால் ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததன் காரணமாக தமிழக அரசு நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரித்தது. இதனையடுத்து திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் முடிவு செய்துள்ளார்.

எனவே கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நுற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்டம் வருகிற 7 ஆம் தேதி புளியந்தோப்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தகளை, மதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர் .

Views: - 123

0

0