செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது… செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி மிரட்டிய திமுக நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 9:38 pm

தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது கரூரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி மிரட்டிய திமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் உள்ள கே.ஏ நகரில் சாக்கடை கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. சாக்கடையின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்டும் அதன் அடிப்பரப்பு பகுதியில் காங்கிரிட் தளம் அமைக்கப்படாமல் இருந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக மாநகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு அங்கு வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அவசர கதியில் சாக்கடையின் அடிப்பகுதியில் காங்கிரிட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கடையில் ஓடும் கழிவு நீரை முழுவதுமாக கூட அகற்றாமல், அப்படியே தள்ளிக் கொண்டு காங்கிரிட் கலவையை கொட்டி பணிகளை விரைவாக முடித்துள்ளனர்.

இந்த நிலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், சம்பந்தப்பட்ட மண்டல குழு தலைவர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கால்வாய் கட்டுமானம் குறித்து நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.

இந்த ஆய்வுப் பணி முடிந்த பின் அப்பகுதி பொது மக்களிடம் செய்தியாளர்கள் சிலர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திமுக மாவட்ட பிரதிநிதி மாரப்பன் என்பவர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியதோடு, தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது என்று மிரட்டல் விடுத்தார். மேலும், பேட்டியளித்த பொதுமக்களை தேவையில்லாத பேச்சு பேச வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அனுப்பினார். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபரை மாநகராட்சி மேயர், மண்டல குழு தலைவர், உள்ளிட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?