கடைக்குள் புகுந்து நோட்டமிட்ட அரை நிர்வாண திருடன் : பேனர் வைத்து எச்சரித்த கடை உரிமையாளரின் விநோத செயல்..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 6:26 pm

கேரளா : கேரளாவில் அரை நிர்வாணமாக கடைக்குள் புகுந்த திருடனை , படத்துடன் பேனர் வைத்து மானபங்கப்படுத்திய கடை உரிமையாளரின் வினோத செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் பழங்கால பொருட்களை விற்கும் Culture என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஜன்னல் கம்பிகளை அறுத்து நள்ளிரவில் அரை நிர்வாணமாக திருடன் ஒருவன் முகம் முழுவதும் துணி கட்டி மறைத்தபடி திருடுவதற்காக உள்ளே புகுந்துள்ளான்.

உள்ளே புகுந்த திருடன் திருடுவதற்காக கடைக்குள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்துள்ளான். இதனிடையே திருடனுக்கு தும்மல் வந்துள்ளது. இதில் திருடனின் முகத்தில் கட்டி இருந்த துணி அவிழ்த்து உள்ளது. கடைக்குள் இருந்த சிசிடிவியில் திருடனின் சேட்டைகள் உட்பட திருடனின் முகமும் பதிவாகியது.

வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த கடை உரிமையாளர் சந்தோஷ் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளார். அப்போது நள்ளிரவில் திருடன் திருட முயற்சித்ததும், திருடனின் முகமும் அதில் பதிவாகி இருந்தது கண்டுள்ளார்.

அதே பகுதியில் மூன்று நாட்களாக வீடுகளிலும் கடைகளிலும் இதே அரை நிர்வாண திருடன் தான் திருடன் முயன்றுள்ளான் என கடை உரிமையாளருக்கும் தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து கடை உரிமையாளர் சந்தோஷ் திருடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தனது கடையின் முன் பகுதியில் அரை நிர்வாண திருடனின் போட்டோவுடன் பேனர் வைத்து, திருடனை அடையாளம் கண்டால் தங்களுக்கு தெரிவிக்கவும் என தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார். இந்த அரை நிர்வாண திருடனின் பேனர் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகிறது.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!