பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் : சரணடைந்த சகோதரர்களுக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 11:15 am
Quick Share

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்திச்சென்று 7 பேர் பலாத்காரம் செய்த வழக்கில் விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்த சகோதரர்களுக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகருக்கு வந்துவிட்டு, பின்னர் அவர் மீண்டும் சென்றார். ஊருக்கு செல்வதற்காக விருதுநகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் அவருக்கு அறிமுகமான கரிசல்குளம் முத்து செல்வன் வந்தார். ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் அந்த பெண்ணை ஏற்றி அழைத்து வந்தார்.

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. அங்கு ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணும், அவரை அழைத்து வந்தவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் 2 பேர், மோட்டார் சைக்கிள், மற்றொரு காரில் வந்த 5 நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணையும், அவரை அழைத்து வந்தவரையும் தாக்கினர்.

அந்த பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று, ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு கொண்டு சென்று 7 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக்கொண்டனர்.

இதற்கிடையே, தாக்கப்பட்ட முத்துச்செல்வன் இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் அந்தபெண் இருக்கிறாரா? என்பதை அறிய போலீசார் தீவிரமாக தேடினர்.

அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , சீனிவாசன் (42), ஜெயக்குமார் (23), ராம்கு மார் (20), அழகுராஜ் (19), மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து நபர்களை அருப்புக்கோட்டை டவுன் காவல்துறையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமுறைவாக இருந்த அண்ணன், தம்பி இருவரான விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் இரண்டில் நீதிபதி நிஷாந்தினி முன்னிலையில் சகோதரர்கள் இருவரும் சரண் அடைந்தனர்.

அவர்கள் இருவரையும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.

Views: - 386

0

0