கிஷான் முறைகேடு : நள்ளிரவில் பெண் அலுவலர்கள் அதிரடி கைது!!
15 September 2020, 8:16 amவிழுப்புரம் : கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி, ஆஷா ஆகிய இருவரை சி பி சி ஐ டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மன் என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இத்திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை திரும்ப பெறப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளின் பட்டியலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில் இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளே அல்லாதவர்கள் சுமார் 42 ஆயிரம் பேரும், இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேரும் என 52 ஆயிரம் பேர் போலியான முறையில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்கின் மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளது தெரியவந்தது.
இவர்களில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளே அல்லாதவர்கள் 19 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 கோடி வரை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அல்லாத 10 ஆயிரம் பேருக்கு விழுப்புரம் மாவட்ட வங்கிகளில் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்கள் 10 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் பெற்ற ரூ.4 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த வழக்கில் நேற்று கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தை மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் வேளாண் துறையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய வெங்கடேசன், புஷ்பராஜ் பழனிகுமார், பாரி, மாயவன் , பிரகாஷ், பாலகிருஷணன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைக்கப்படனர்.
இந்நிலையில் நேற்றிரவு இந்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றிய வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி, ஆஷா ஆகிய இருவரை சி பி சி ஐ டி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இரவு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடி வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ. 8 கோடி வரை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..