பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டுநரின் அலட்சியம் ; கிராமமே துக்கத்தில் மூழ்கிய சோகம்..!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 4:59 pm

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்துறை ஹட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, ஷோபனா, தம்பதியினர். இவர்களுக்கு பிரணவ் (7), லயா (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லயா கேர்கம்பை பகுதியில் உள்ள இல்போர்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று மாலை பள்ளி விட்டதும் பள்ளி வாகனத்தில் குழந்தை லயா, சொந்த ஊரான கூக்கல்துறைக்கு வந்துள்ளார். வாகனத்தை கூக்கல் பகுதியை சேர்ந்த சஞ்சை என்பவர் ஓட்டி வந்துள்ளார். வீட்டின் அருகே வந்தவுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய லயா, வாகனத்தின் பின்புறத்தில் சென்றதாக தெரிகிறது. இதனை கவனிக்காத வாகன ஓட்டுநர், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை லயா பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒருவர் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, தகவல் அறிந்த கோத்தகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தை லயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஓட்டுநர் சஞ்சை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 1683

    0

    0