கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்? மோப்ப நாய்களுடன் பரபரப்பான வளாகம்…
Author: Prasad2 September 2025, 4:35 pm
கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை. ஆதலால் இது வெறும் பொய் மிரட்டல் என்று அறியப்பட்டு அதிகாரிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில்தான் இன்று காலை 10.45 மணி அளவில் இ-மெயில் மூலமாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பதறிப்போன அலுவலக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு காவல் துறையினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு விரைந்து வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முழுவதும் அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு இமெயில் மூலம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று முறையும் மிரட்டல் விடுத்தது ஒரே நபர்தானா? என போலீஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இமெயில் அனுப்பிய நபர், தன்னை யார் என கண்டறியமுடியாத வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதால் இமெயில் அனுப்பிய நபர் யார் என்று கண்டுபிடிப்பது பெரிய சவாலாக உள்ளதாக கூறுகின்றனர்.
