என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டாரு… இப்படி கொன்னுட்டீங்களே… ஒருத்தரையும் விடாதீங்க : ஜெகனின் மனைவி கண்ணீர் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 8:48 am

கிருஷ்ணகிரி : என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டவரை நம்ப வைத்து கழுத்தருத்து விட்டார்கள் என்றும், ஒருத்தரையும் விடாமல் தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று சட்ட சபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளருக்கு பேட்டியளித்த ஜெகனின் மனைவி 4 வருடமா காதலித்தோம், கல்யாணம் ஆகி 2 மாதம் கூட ஆகவில்லை. அப்பா, அம்மா நியாபகம் வராமல் என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டார். வீட்டு நியாபகம் வந்து நான் அழுதால் என் கணவரும் என்னுடன் சேர்ந்து அழுவார். உனக்கு அப்பா, அம்மாவா நான் இருக்கிறேன் என கூறினார். எங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்கள். ஒருத்தரையும் விடாதீர்கள், தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்.

என் பிள்ளையை துடிக்க துடிக்க வெட்டி விட்டார்கள். என்னை மேஸ்திரி வேலை செய்ரவனுக்கு கொடுக்க மாட்டேன் என கூறினார்கள். 4 வருடங்களில் பல முறை நான் கேட்டு அடி வாங்கி இருப்பேன். ஆனால் ஒரு முறையும் மனசு உருகலையே. நான் கேட்கும் போதெல்லாம் என் அம்மா என் முகத்தில் எட்டி எட்டி உதைப்பார், என கண்ணீருடன் தெரிவித்தார்.

தொடர்ந்து உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தரப்பில் ஜெகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், ஜெகனின் மனைவி சரண்யாவுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!