சட்ட போராட்டம் நடத்தி போலந்து போட்டியில் பங்கேற்ற குமரி மாணவி 7 வது இடம் : பட்டாசு வெடித்து வரவேற்ற பொதுமக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 11:22 am
Samiha Parveen - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : போலாந்து நாட்டில் நடைபெறும் மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் குமரி மாணவி 7-வது இடம் பிடித்த நிலையில் தகுதிபெற்ற சமீகா பர்வீனுக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜீப்-சலாமத் தம்பதியரின் மகள் சமீகா பர்வின் தனதுசிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் செவிதிறனை இழந்தும் விடாமுயற்சியால் தடகளபோட்டியில் பயிற்சி பெற்று தேசிய அளவிலான காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று மூன்று முறை தங்கபதக்கங்களை வென்றுள்ளார்.

சர்வதேச அளவிலான போலந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் அழைத்து செல்ல இந்திய விளையாட்டு ஆணையம் முன் வராத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற துணையுடன் போலாந்து நாட்டில் விளையாட சென்றார்.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி போலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகளபோட்டியில் மாணவி சமீகா பர்வின் கலந்து கொண்டு நீளம்தாண்டுதல் போட்டியில் 4.94மீட்டர் தாண்டி 7வது இடத்தை பிடித்து அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கு ( deaf olympic)தகுதிபெற்றார்.

அதை தொடர்ந்து சொந்த ஊரார கடையாலுமூட்டிற்கு வந்த மாணவி சமீகா பர்வீனை பொதுமக்கள் பட்டாசுவெடித்து மாலைகள்,சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். அதை தொடர்ந்து குடும்பத்தினர் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

இது குறித்து சமீகாவின் தாய் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது மகள் பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தி போட்டியில் கலந்து கொண்டதால் மன அழுத்தத்துடன் தான் போட்டியில் கலந்து கொண்டார்.

அப்படி இருந்தும் இந்த சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது ,இந்த போட்டியில் கலந்து கொள்ள மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை ஆனால் தற்போது அரசின் ஆதரவு கிடைத்து வருகிறது என்றார்.

Views: - 403

0

0