காட்டு யானையைக் காப்பாற்ற கும்கிகள் : மேலும் ஒரு யானையை வரவழைத்தது வனத்துறை!!

14 September 2020, 6:42 pm
Kumki- updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காயமடைந்து நகர முடியாமல் உள்ள யானையை மீட்க மேலும் ஒரு கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான நெல்லித்துறை பகுதியில் காயம் அடைந்து சுற்றித் திரியும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு நியமிக்கப்பட்டு நாளை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

காயமடைந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மருத்துவர்களுக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமிலிருந்து சுயம்பு என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கும்கி யானை சுயம்பு இறக்கப்பட்டு நெல்லிதுறை கிராமத்துக்கு நடந்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நேற்று கும்கி யானை சுயம்பு, பவானி அணையை தாண்டி செல்ல முடியாமல் தத்தளித்தது.

பவானி ஆற்றில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. நீரோட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றின் பாதி தூரம் வரை சென்ற கும்கி யானை சுயம்பு ஆற்று வெள்ளத்தில் சிக்கியது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து யானையினால் மேற்கொண்டு நகர முடியாததால் யானை தத்தளித்தது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட யானையின் பாகன் ஒரு வழியாக போராடி யானையை மீண்டும் திருப்பி கரைக்கே கொண்டு வந்தார். இந்த நிலையில் டாப்சிலிப் முகாமில் இருந்து மேலும் ஒரு யானை வரவுள்ள நிலையில் இரண்டு யானைகளும் ஒன்று சேர்த்து அழைத்துச் செல்ல வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் காயமடைந்து நெல்லித்துறை வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவியாக மேலும் ஒரு கும்கியானை மேட்டுப்பாளையம் வந்தது. சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து வெங்கடேஷ் என்ற கும்கி யானை காட்டுயானையை பிடிக்க கொண்டுவரபட்டுள்ளது

Views: - 9

0

0