நவீன தீண்டாமையில் திமுக.. எல்.முருகன் சரமாரி பேச்சு!

Author: Hariharasudhan
8 March 2025, 1:38 pm

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்புத்தூர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்றைய தினம் பொதுமக்கள் மூன்று மொழி வேண்டும் எனக் கேட்கிறார்கள். மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் மூன்று மொழி படிக்கிறார்கள்.

அப்படியானால் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்? பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், பணம் இல்லாத ஏழை – எளிய மக்கள், அதிகமாக அரசுப் பள்ளிகளில் தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியானால் அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள்? இவர்கள் செய்வது ஒரு நவீன தீண்டாமையைத்தான் இவர்கள் கடைபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். மூன்று மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, அன்புமணி ராமதாஸின் மொழி கூற்று பற்றிய கேள்விக்கு, “பாரதிய ஜனதா கட்சி மூன்று மொழி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே. அதனால் நாங்கள் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்று எங்கள் கூற்றில் உறுதியாக இருக்கிறோம்” என பதிலளித்தார்.

L Murugan

மேலும், மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய விஜய், மகளிரை அரசாங்கம் ஏமாற்றியதாக கூறியது பற்றிய கேள்விக்கு, “தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான். கிட்டத்தட்ட பத்து கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச கேஸ் கனெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இலவச வீடு கட்டும் திட்டத்தின் வீட்டுமனை பட்டா தாய்மார்களின் பெயர்களில் தான் பதிவு செய்யப்படுகிறது.

முத்ரா லோன்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பயனாளிகள் பெண்களாக உள்ளார்கள். சந்திரயான் திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியவர்கள் பெண்களாக இருக்கிறார்கள், நம்முடைய பெண்கள் சயின்ஸ் டெக்னாலஜி என முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் women empowerment ஒருபடி மேலே தான் சென்றிருக்கிறது.

குறிப்பாக, Defence sectorல் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. National defence academyல் முதன் முறையாக பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.

இன்றைய நாட்களில் தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால், திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும்” எனக் கூறினார்.

இதனையடுத்து, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியை தாய் மொழியில் படிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே தமிழ் மொழியில் பாடங்கள் கொண்டு வந்த பொழுது, வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார்களே என்று கேள்விக்கு, “மத்திய பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களில், கட்டாயமாக அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியில் கல்வியை கற்கிறார்கள். அவர்கள் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்புகள் வருகிறது.

இங்கேயும் நீங்கள் கட்டாயமாக அதை நடைமுறைப்படுத்தும் பொழுது நிச்சயம் வாய்ப்புகள் வரும் என்று கூறினார். மீனவர்களுக்காக அறிவிப்பு மட்டும் வருகிறது எதுவும் செய்வது இல்லை என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
மீன்வளம் மற்றும் மீனவர்களைப் பொறுத்தவரை, பிரதமர் வந்த பிறகு தான் மீனவர்களுக்காக ஒரு புதிய அமைச்சகத்தையே உருவாக்கினார்.

இதையும் படிங்க: காதலினா எப்படி இருக்கனும் தெரியுமா…நடிகர் சிம்பு கலக்கல் பேச்சு.!

கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2014க்கு முன்பு வெறும் 400 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் அடிப்படை தேவைகள், துறைமுகங்களை வலிமைப்படுத்துவது போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது பிரதமர் மோடி காலத்தில் தான்.

பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு, மீனவர்கள் மீது ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கூட நடைபெறவில்லை. மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது உடனடியாக வெளியுறவு மத்திய அரசாங்கம் தலையிட்டு, மீனவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலமாக தொடர்ந்து மீனவர்களை பத்திரப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!