நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம்:: முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

26 November 2020, 11:24 pm
Quick Share

புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுமார் 400 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை துறையின் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது, இதில் அமைச்சர்கள், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறை செயலர்கள்கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி, கன மழை காரணமாக நகர் மற்றும் கிராமப்புறங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும்,

வரலாறு காணாத அளவில் நேற்று இரவு 8.30 மணி முதல் காலை 8.30மணி வரை 27செ.மி மழை பெய்துள்ளதாகவும், இதன் காரணமாக விவசாய பயிர்கள், சாலைகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்ததாக தெரிவித்தார். மேலும் மிகப்பெரிய புயல் தாக்கிய நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், தற்போது வரை 90% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 11மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,

முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 55 ஹெக்டேர் வாழை தோட்டங்களிலிருந்து வாழை மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போது உத்தேசமாக ரூ. 400 கோடி அளவுக்கு சேதம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.50 கோடி வழங்க வேண்டும் என கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் முழு கணக்கெடுப்பு முடிந்த பின்னர் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

Views: - 0

0

0