வீட்டில் தனியாக வசித்து வந்தவர் “படுகொலை“ : கொள்ளையர்களின் கைவரிசையா என விசாரணை!!

7 November 2020, 4:44 pm
Kanyakumari Murder - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோயில் அருகே கீழ சரக்கள்விலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்தவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கள்விலை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். 58 வயதான இவர் பல வீடுகளுக்கு சென்று படுக்கையில் உள்ள நோயாளிகளை பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் வரை இவர் வீட்டில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டிற்குள் கொண்டு சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் கட்டிலின் மீது பிணமாக காணப்பட்டார்.

அவரது முகத்தில் ரத்தம் தோய்ந்த தலையணை காணப்பட்டதோடு கழுத்து பகுதி அறுக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் தலையணையால் முகத்தில் அழுத்தப்பட்டு சத்தம் வெளியே வராத வகையில் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

சம்பவத்தை அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதோடு, மோப்ப நாய் ஏஞ்சல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவரிடம் பணம் கைவசம் இருக்கும் எனவும் தனியாக இருக்கும் இவரிடமிருந்து கொள்ளையடிக்கலாம் எனவும் எண்ணி மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தனியாக வசித்து வருவதால் பணம் கைவசம் இருந்ததா? நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து விபரம் தெரியாத நிலையில், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 13

0

0