விநாயகர் சிலை உடைப்பு..! கோவையில் திடீர் பரபரப்பு..!

20 August 2020, 7:44 pm
Lord_Ganesha_Idol_UpdateNews360
Quick Share

வீட்டை விரிவாக்கம் செய்வதற்கு இடையூறாக இருந்த விநாயகர் சிலையை உடைத்த நபரால் கோவையில் திடீரென பதற்றம் தொற்றிக்கொண்டது.

கோவை மாநகரில், வைசியாள் வீதியை ஒட்டி அமைந்துள்ள கருப்பராயன் கோவில் வீதியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ரோட்டோரத்தில் அமைந்துள்ள மூன்றடி உயரமுள்ள விநாயகர் சிலை இன்று அதிகாலை உடைந்து காணப்பட்டது.

சிலை சேதமடைந்த தகவலை அறிந்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரியகடை வீதி போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிலை வாகனத்தில் மோதி சேதமடைந்ததா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் உடைத்தார்களா எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சிலை இருந்த பகுதியை ஒட்டிய கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளும் போலீசாரால் ஆராயப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சிலையை ஒட்டி அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரான, 87 வயதான ராஜப்பன் சிலையை உடைத்தது தெரிய வந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டின் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் சிலையை உடைத்ததாக தெரிவித்தார். அவரது வயது காரணமாக போலீசார் கைது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரித்து விடுவித்தனர்.

மேலும், சேதமடைந்த சிலைக்கு பதிலாக, அதே இடத்தில் புதிய சிலைகளை நிறுவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், திடீரென விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால், கோவையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Views: - 28

0

0