கலப்பு திருமணம் செய்த காதல் மனைவி கடத்தல் : கண்ணீருடன் புகார் அளித்த கணவர்.. இறுதியில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2025, 4:58 pm
நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய், 22. இவர் மனைவி அர்ச்சனா, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த ஜூன் 28ல் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணத்துக்கு அர்ச்சனாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அர்ச்சனா, அப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள பட்டு சென்டருக்கு தினமும் வேலைக்கு சென்று வந்தார். விஜய் தினமும் பைக்கில் மனைவியை வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.
இருவரும் தற்போது ஈரோடு கள்ளுக்கடை மேடு வீதியில் வசித்து வருகின்றனர். இன்று விஜய் வழக்கம் போல வேலைக்கு அழைத்து செல்ல மனைவியை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

அப்போது காரில் வந்த அர்ச்சனாவின் தந்தை செல்வம், அவர் மனைவி கவிதா மற்றும் நான்கு பேர் திடீரென காரில் இருந்து இறங்கி விஜயை தகாத வார்த்தையால் திட்டி, அர்ச்சனாவை காரில் வலுகட்டாயமாக ஏற்றி கடத்தி கொண்டு சென்றனர்.
இதையடுத்து தன் மனைவியை மீட்டு தர வேண்டும், காரில் மனைவியை கடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் தெற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுதது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பர்கூரில் அர்ச்சனாவை கடத்தி செல்வது தெரியவந்தது.

போலீசார் சென்று நாமக்கல் கொக்கராயன் பேட்டை தேவனாம்பாளையம் கரும்பு வெட்டும் தொழிலாளியான செல்வம் (வயது 45), அவர் மனைவி கவிதா (வயது 42), பவானி ஒலகடம் தாசனுாரை சேர்ந்த லாரி டிரைவரான பெரியப்பா பழனிச்சாமி (வயது 45), அந்தியூர் பச்சாம்பாளையம் பள்ளிபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கருமலையான் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (வயது 46) மற்றும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 35) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
