கட்டு கட்டாக போலி ரூபாய் நோட்டுக்கள்… அதிர்ச்சி தந்த சீருடை : போலீசிடம் வசமாக சிக்கிய 10 கொள்ளையர்கள்..!!

Author: Babu Lakshmanan
23 September 2021, 2:11 pm
madurai crime - updatenews360
Quick Share

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகன சோதனையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ராதாமகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆவல்சூரன்பட்டி விலக்கு அருகே மதுரை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சோதனைச்சாவடி அமைத்து வாகனசோதனையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஃபோல்க்ஸ்வேகன் மற்றும் பொலிரோ உள்ளிட்ட 2 கார்களை நிறுத்தி காரில் உள்ளவர்களிடம் விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரில் இருந்த சிலர் கள்ளிக்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு ஓன்றில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

பின்னர், காரில் வந்த 10 நபர்களையும் கைது செய்த பிறகு, காரில் சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் 2000, 500, 100 ரூபாய்களில் கலர் ஜெராக்ஸ் தாள்கள் கட்டுக்கட்டாக 3 பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய சோதனையில் 2000, 500, 100 கள்ளரூபாய் நோட்டுக்களும் போலீசார் அணியக்கூடிய காக்கிநிற உடைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 10பேரையும் கள்ளிக்குடி காவல்நிலையத்திற்கு அழைத்த சென்று விசாரித்தனர்.

அதில், கள்ளிக்குடி காவல்நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான கரூர் மாவட்டத்தை சொந்த யோகராஜ் (38), சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சுனில்குமார் (49), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த அன்பு என்ற அன்பரசன் (31) கேரளமாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த டோமிதாமஸ், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த அக்பர் (60), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஹுமாயூன் (42) திருமங்கலம் அருகே அரசபட்டியைச்சேர்ந்த தண்டீஸ்வரன் (33), ஈரோடு சரவணன் (37), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ரமேஷ் (37), காட்பாடியைச் சேர்ந்த பொன்ராஜ் (65) என்பது தெரிய வந்தது.

இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணமோசடியில் ஈடுபட்டவர்கள் என்பதும், தற்போது தமிழகத்திற்குள் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு மோசடியில் ஈடுபட முயன்றதும், மேலும் காவல்துறையினர் போல் சீருடை அணிந்து வாகன சோதனை என்ற பெயரில் அவ்வப்போது வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் சம்பவத்திலும் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 221

0

0