கொரோனாவுக்கு எதிராக பிற மாவட்டங்களுக்கு புறப்படும் பிரபல யாசகர் : இதுவரை ரூ.1.10 லட்சம் கொரோனா நிதி!!

3 September 2020, 12:46 pm
Beggar Man - Updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் 3 மாதமாக யாசகம் பெற்ற 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய யாசகர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கைராசியால் நிவாரண உதவியை செய்ய முடிந்ததாக நெகிழ்ச்சியடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல் பாண்டியன் என்பவர் பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த மே மாதம் முதல் கொரோனா நிவாரண நிதியாக வழங்க தொடங்கி இன்று 11வது முறையாக 10 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.

பூல் பாண்டியன் இதுவரை தலா 10 ஆயிரம் வீதம் 11 முறை என மொத்தமாக இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார், இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி வழங்கியுள்ளதோடு, அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை பாராட்டி சமூக சேவைக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய பூல்பாண்டியன் “ஊரடங்கு தொடங்கியதில் இருந்து மதுரையில் தங்கி உள்ளேன், 3 மாதமாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளேன், முதன் முதலில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் 100 ரூபாய் யாசகம் பெற்றேன், அவரின் கைராசி, முகராசியால் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை யாசகமாக பெற்று கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன், மதுரையில் இருந்து புறப்பட்டு பிற மாவட்டங்களுக்கு சென்று அப்பகுதியில் பெறும் யாசக பணத்தை ஆட்சியரிடம் நிதியாக அளிக்க முடிவு செய்து உள்ளேன்” என கூறினார்

Views: - 0

0

0