மதுரை மாநகராட்சி முறைகேட்டில் திருப்பம்.. ரூ.150 கோடி.. உதவி ஆணையர் அதிரடி கைது!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2025, 6:09 pm
மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட குறைவாக விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இந்த முறைகேடு முதன்முதலில் மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால், குறிப்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வணிக வளாகங்களுக்கு குறைவாக வரி விதிக்கப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மாநகராட்சியின் அப்போதைய ஆணையராக இருந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரணையை தொடங்கியது.
இந்த விசாரணையில், ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வருவாய் உதவியாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்கள் உட்பட 55 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் 7 வருவாய் உதவியாளர்கள் மற்றும் ஒரு கணினி இயக்குபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கில் மதுரை மாநகராட்சியில் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பணியாற்றி வரும் சுரேஷ்குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 19 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டாகும்
