கருணாநிதிக்கு பதிலாக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை சூட்டுங்க ; ஜல்லிக்கட்டு அரங்கின் பெயரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Author: Babu Lakshmanan
20 January 2024, 4:28 pm

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சல்லிக்கட்டுத் திடலுக்கு ‘தமிழ் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் சூட்டக்கோரி தமிழ் தேசிய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பாரம்பரியமும், வீரமும் நிறைந்த ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு காலம் காலமாக தமிழர்களின் பண்பாட்டோடும் வாழ்வியலோடும் இணைக்கப்பட்ட வீரவிளையாட்டு ஆகும். அதனடிப்படையிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சில தன்னார்வ அமைப்புகள் ஏறுதழுவல் எனும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்யவும், வீட்டு விலங்கான கால்நடைகளை காட்டு விலங்காக வகை செய்யவும் முயன்று தமிழர் பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

இதனை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான எழுச்சி அலை, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. மதுரையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் தமிழகத்தில் பரவாத இடம் இல்லை என்ற நிலை உருவானது. தமிழர்கள் தங்களது வாழ்வியலோடும் பண்பாட்டோடும் இணைந்த ஜல்லிக்கட்டை, மெரீனா புரட்சியை முன்னெடுத்து பாதுகாக்க வேண்டிய சூழல் உருவானது. இதை ஒட்டியே அன்றைய தமிழக அரசு அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை முறைப்படுத்த முயன்றது.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழக அரசால் சல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் கட்டப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. அதேவேளை அந்த ஜல்லிக்கட்டு திடலுக்கு ஏதேனும் ஒரு அரசியல் தலைவரின் பெயரைச் சூட்டி தமிழர்களின் பண்பாட்டை தற்போதைய அரசு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க முயல்கிறதோ? என்ற ஐயமும் அச்சமும் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் தமிழர் பண்பாட்டு அமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அத்தகைய அச்சத்தை அகற்றும் பொருட்டு மதுரையில் சிறப்பான முறையில் கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ள புதிய சல்லிக்கட்டு திடலுக்கு தமிழ் மாமன்னனும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படை கடந்து தமிழர் வீரத்தை நிலைநாட்டிய ‘தமிழ் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏறுதழுவுந்திடல்’ என்ற பெயரைச் சூட்டி தமிழர்களின் வீரத்தையும், வாழ்வியலையும், வரலாற்றையும் பண்பாட்டையும் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கதிர் நிலவன் தலைமையில் தமிழ்த் தேசிய அமைப்புகள் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் இமயம் சரவணன், பி.மா. பாண்டியன், அருள் இனியன், செந்தமிழ்க் குமரன், ஜீவா, மணிகண்டன், அருணா, இராதா கிருஷ்ணன், திருக்குமரன், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!