பேருந்தில் புட் – போர்ட் அடித்துக்கொண்டு பயணம் செய்யும் பெண்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Author: kavin kumar27 October 2021, 2:02 pm
மதுரை: மதுரையில் பேருந்தில் பெண்கள் புட் – போர்ட் அடித்துக்கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு இலவசம் என்கின்ற பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பின் காரணமாக ஏராளமான பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய பேருந்துகள் சில நேரங்களில் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் அதிக அளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இந்தநிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காளவாசல் பகுதிக்கு சென்ற மாநகரப் பேருந்தில் பெண்கள் கூட்ட நெரிசல் காரணமாக புட் போர்டில் நின்றவாறே பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருந்து வரும் அபாயகரமான புட் போர்ட் கலாச்சாரம் தற்போது பெண்கள் புட் போர்டில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
0
0