ஜாக் அமைப்பு சட்டவிரோதமானது… கோர்ட் உத்தரவின் பேரில் தாயாரின் இறுதிச்சடங்கை செய்து முடித்த இஸ்லாமியர் குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
25 June 2021, 5:15 pm
kumari - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: மதுரை கோர்ட் உத்தரவின் பேரில் தனது தாய்க்கு இறுதி மரியாதை செய்த மகன் கன்னியாகுமரி ஜாக் அமைப்பு எந்த அங்கீகாரமும் இல்லாதது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

குமரி மாவட்டம் கன்னியாகுமரி பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அபுல் கலாம் ஆசாத். இவர் தி.மு.கவில் தொண்டரணி துணை அமைப்பாளராகவும், மதுரை கோர்ட்டில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியை ரொஹியாம்மாள் (76). இவர் கடந்த 22 ஆம் தேதி காலமானார். முஸ்லிம் ஜமாத்தில் உள்ள இரு பிரிவினர் கருத்து வேறுபாடு காரணமாக இவரது இறுதி சடங்கு செய்வதில் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும் இறுதி மரியாதை செலுத்தவும், இறந்தவருக்காக பிராத்தனை செய்யவும் ஒரு பிரிவு அமைப்பினர் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து தனது தாய்க்கு இறுதி மரியாதை செய்ய முடியாததால் மன உளைச்சலில் இருந்த மகன் அபுல் கலாம் ஆசாத் மதுரை உயர் நீதி மன்றத்தில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது தாயாருக்கு இறுதி மரியாதை செய்ய அனுமதிக்கப் படாததால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனக்கு இறுதி மரியாதை செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவசர வழக்காக இதனை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மனுதாரருக்கு மறைந்த தாயாருக்கு இறுதி மரியாதை செய்ய நாகர்கோவில் போலீஸ் டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இன்று 25 -ந்தேதி காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மனுதாரரும் அவரது உறவினர்களும் அடக்க பகுதியில் அவர்களது நம்பிக்கையின் படி இறுதி மரியாதை மற்றும் பிராத்தனை செய்து கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று போலீஸ் பாதுகாப்புடன் குடும்ப உறவினர்கள் மறைந்த பெண்ணிற்கு முஸ்லிம் முறைப்படி இறுதி சடங்கு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மறைந்த பெண்ணின் மகன் அபுல்கலாம்ஆசாத் கூறியதாவது : நாங்கள் கன்னியாகுமரியை பூர்விகமாக கொண்டவர்கள். எனது 76-வயதான தாயார் கடந்த 22- ந்தேதி இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்யும் போது கன்னியாகுமரி ஜாக் என்ற தனியார் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அமைப்பினர் வெளியூர் ஆட்களை வைத்துகொண்டு இங்குள்ள பள்ளி வாசலை கைப்பற்றி வைத்துள்ளனர். கடந்த 15,20 ஆண்டுகளாக எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களையும் செய்ய விடாமல் வெளியூர்காரர்கள் உள்ளூர் காரர்களை நசுக்கி அராஜகம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனது தாயாரின் அரங்கத்தின் போது ஆயுதங்களுடன் வந்து தாக்க முயன்றனர்.

பின்னர் போலீஸ் தலையிட்டு எனது தாயாரின் அடக்கம் நடைபெற்றது. தொடர்ந்து பிரார்த்தனை செய்ய விடாமல் எங்களை வெளியில் தள்ளி விட்டனர். உயர்நீமன்றத்தில் உத்தரவின் பேரில் இன்று இந்த பிரார்த்தனை நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து வக்பு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி ஜாக் என்கின்ற அமைப்பு அங்கீகாரம் இல்லாதது. கடந்த 12 ஆண்டுகளாக வக்பு வாரியத்திற்கும் கணக்கு கொடுக்காமல் அராஜகமாக நடத்தி வருகின்றனர்.

வெளியூர் ஆட்களை உறுப்பினராக சேர்ந்து கொண்டு முறையான தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கின்றார்கள். வக்பு வாரியம் நடவடிக்கை எடுத்து இதை மீட்க வேண்டும். வக்பு வாரியமே இந்த பள்ளி வாசலை நேரடியாக நடத்த வேண்டும். கன்னியாகுமரி ஜாக் என்ற அமைப்பினர் வெளிநாட்டில் இருந்து பல கோடி நன்கொடை வாங்கியுள்ளனர்.

இவர்கள் எத்தனையோ மோசடிகளை செய்துள்ளனர்.பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை பள்ளிக்கு விளையாட்டு மைதானம் என போலியான ஆவணம் உருவாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்பவர்களை மிரட்டி ஒடுக்குகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 390

0

0