ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம்: அமைச்சர்கள் மற்றும் எம்பி அஞ்சலி…

3 July 2021, 2:59 pm
Quick Share

திருச்சி: இந்திய சீனா எல்லையான சிக்கிம் மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட லால்குடி வீரர் விபத்தில் கடந்த 30 ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் இன்று லால்குடியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ், ராஜம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு தேவஆனந்த் உள்ளிட்ட இருமகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தேவஆனந்த் கடந்த 2014 ம் ஆண்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சிக்கின் மாநில பகுதியில் உள்ள இந்திய சீனா எல்லைப் பகுதியில் ராணுவ தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 30 ம் தேதி பணியினை முடித்து விட்டு, ராணுவ முகாமிற்கு மலைப் பகுதியிலிருந்து ராணுவ வாகனம் மூலம் வந்த போது, வாகனம் மலைப் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்ததில் வாகனம் சுக்கு நூறாக நொருங்கியது.

இதில் வாகனத்தில் பயணித்த தேவ ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். தேவ ஆனந்த் உயிரிழந்த செய்தி லால்குடியில் உள்ள அவரது உறவினருக்கு ராணுவ வீரர்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும் உயிரிழந்த தேவ ஆனந்த உடலை விரைவாக சொந்த கிராமத்திற்கு கொண்டு வர உதவிடுமாறு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா விடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் திருச்சி சிவா எம்பி ராணுவ வீரரின் உடலை விரைந்து கொண்டு வர கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் சிக்கிம் மாநிலத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் வந்து,

விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருச்சி லால்குடி பகுதியில் உள்ள திண்ணியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை ராணுவ வீரர் உடல் வந்தது. அவரது உடலுக்கு எம்பி திருச்சி சிவா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள இடுகாட்டு கல்லறையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்தனர்.

Views: - 90

0

0