ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென கழன்று விழுந்த படிக்கட்டு… உயிர்தப்பிய பயணிகள் : மக்களின் உயிரில் அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு..?

Author: Babu Lakshmanan
23 November 2021, 1:05 pm
Govt bus - updatenews360
Quick Share

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கல்லூரி மாணவர்கள்:-

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று காலை அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு 27ஏ என்ற அரசு பேருந்து மயிலாடுதுறையிலிருந்து செம்பனார்கோவில் ஆக்கூர் வழியாக பொறையார் புறப்பட்டு சென்றது. பேருந்தில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில், நிற்க இடமில்லாமல் பேருந்தின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அதிக அளவு கூட்டத்தால் பேருந்து மெதுவாக சென்றுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் அருகே தரங்கம்பாடி சாலையில் பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. அப்போது, அந்தப்படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கீழே இறங்கி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படிக்கட்டு உடைந்தது தெரியாமல் சென்ற பேருந்தை தட்டி கூச்சலிட்டு, மாணவர்கள் டிரைவருக்கு தெரியப்படுத்தியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.

கண்டக்டர் இறங்கி சென்று நடுரோட்டில் உடைந்து கிடந்த பேருந்தின் படிக்கட்டை எடுத்து பேருந்தில் போட்டுவிட்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் அந்த பேருந்தில் அச்சத்துடனேயே பயணம் செய்தனர். அரசு பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவது இந்த சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.

காலை நேரத்தில் தினந்தோறும் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமும் அடைந்து அதிக அளவில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும் என்றும், உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு பணிமனையில் உள்ள பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே, அரசுப் பேருந்தின் பரிதாப நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஏற்கனவே, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்தின் அவலத்தை ஓட்டுநரை வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார். அதேபோல, தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கும் அரசுப் பேருந்தில் மிகப்பெரிய ஓட்டை இருந்த செய்தியையும் அண்மையில் நாம் கண்டாம். இப்படியிருக்கையில், தற்போது, மற்றொரு அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவத்தின் மூலம் பொதுமக்களுக்கான போக்குவரத்துத்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்கிறது.

உயிர்பலி எதுவும் ஏற்படுவதற்கு முன்பாகவே, தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் உரிய கவனம் செலுத்தி, அரசுப் பேருந்துகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்ய முடியும். மக்களின் உயிரில் அரசு அலட்சியப்படுத்தி விடக் கூடாது,” எனக் கூறினர்.

Views: - 339

0

0