தேர்தலா..? அதை பற்றிய சிந்தனை இல்லை…! எங்கள் பணி மக்களை காப்பது…!
12 August 2020, 11:39 amசென்னை: நாங்கள் இன்னமும் தேர்தலை பற்றியே சிந்திக்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக குழப்பங்கள் எழுந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது.
அவர்களுக்கு உறுதுணையாக கட்சியின் அடுத்தக்கட்ட தலைவர்களும் இருக்க, மக்கள் நலப்பணிகளும், திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 7 மாதத்தில் தமிழகத்துக்கு 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
அதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு அதிமுகவில் இப்போதே எழ துவங்கி உள்ளது. முதலவர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் ராஜூ இது குறித்து கூறி இருப்பதாவது: தேர்தலை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதி. மக்களை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே கூறுவார். அது தான் எங்கள் வழி. அதில் தான் பயணித்து வருகிறோம்.
தேர்தலுக்கு அவசரம் இல்லை. இன்று நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் நம் மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதில் தான் எங்களின் எண்ணம் உள்ளது. தேர்தலை பற்றி சிந்திப்பதில் அல்ல. தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு எடுப்பார்கள் என்று கூறி உள்ளார்.